Tuesday, January 31, 2012

வேரை மறந்த விழுதுகள்



பெற்ற மகன்கள் அழகு பார்த்து
பெண்ணவள் தன்னவன் முகம்கூட  மறந்தாள்;
பாவம் பதுமை முதுமையும் உடுத்தினாள்,
சிக்கன சேலையில் சிதைந்தும் கிடக்கிறாள்;

முதிர்ந்த உணர்வுகள்   உடலை நடுக்கியும்,
மூக்குக்கண்ணாடி கீறல்கள்  தடுத்தும்,
மூத்தமகன் அப்பா என்றழைக்க
மூன்று மாதமாக தகப்பன் தவிக்கிறான்;

அவனும் அவளும் எழுதிய கவிதைகள்,
அன்பெனும் ஆன்மிகம் அறிந்தே பிறந்தன;
காலங்கள் ஓடிட ஆன்மிகம் மறந்தன;
காதலின் கவிதைகள் இலக்கணம் பிழைத்தன;

இப்படி பிள்ளைகள் பிறக்கும் என
அன்னையும் பிதாவும் முன்னறியவில்லையே!
ஆண்டவன் அருள்வேண்டி ஆலயம் தொழுதும் ,
இரக்கமற்ற ஆண்டவன் அருள் தரவில்லையே!

நெஞ்சூட்டி வளர்த்த தாய்,
செஞ்சூட்டில் கருகும் முன்
வந்தொருமுறை  வசையாவது பாடுங்கள் ,
வேரை மறந்த விழுதுகளே!